நெய்வேலியில் 27.03.2012 அன்று நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆற்றிய உரை..
“எதிர்வரும் ஏப்ரல் திங்கள் இரண்டாம் நாளில் நடைபெற உள்ள தேர்தலில் எங்களது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணிக்கு எண்-6 இல் வாக்களித்து எங்களை அங்கீகரிக்க வேண்டும். எங்கள் அமைப்பு வலுñன்ற ஆதரிக்க வேண்டும். எங்களின் இலட்சியப் பணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கூடியுள்ள தொழிலாளர் தோழர்களை எல்லாம் தோழமையுடன் கேட்டுகொள்கிறேன்.
சங்கரன்கோவில் தேர்தல் களத்திலிருந்து அண்மையில் தான் நாங்கள் வந்திருக்கிறோம். அந்த இடைத்தேர்தல் நடைபெற்ற முறை குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். எங்கள் தலைவர் வைகோ குறிப்பிட்டதைப்போல், கங்கை நதியைப் போல பணம் அங்கே வெள்ளமென பாய்ந்து வந்தது. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற, மாநகர் மன்றத் தலைவர்கள் என அதிகார முகாம்களை வீதிக்கு வீதி நிற்கவைத்து, பணத்தை வாரி இறைத்து, எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் மின்சாரம் வழங்க மாட்டோம், எந்தவிதமான வசதிகளையும் செய்து தர மாட்டோம் என்று மிரட்டி ஆளும் கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் முன்னணி, முÞலிம் லீக் என கூட்டணியுடன் களம் இறங்கி திருமங்கலம் பார்முலாவை பின்பற்றி தி.மு.க. இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கையிலே காசில்லாமல் நெஞ்சிலே மாசில்லாமல் என்று அண்ணா சொன்னதைப்போல நாங்கள் களத்தில் நின்றோம். மக்களைச் சந்தித்தோம். நேர்மையாக கண்ணியமாக எங்கள் தனித்தன்மையை எடுத்துச்சொல்லி வாக்குக் கேட்டு மூன்றாவது இடத்தினைப் பெற்றிருக்கிறோம்.”
“தமிழ் நாட்டை ஆள ஒரு தூய தலைவன் வரப்போகிறான் என்பதற்கு சங்கரன்கோயிலே சாட்சி. மூலை முடுக்கெல்லாம் தமிழர் பிரச்சினையைத் தேடித்தேடி போராடுகிற ஒரே தலைவர் வைகோ. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நான் சொல்றேன் வைகோ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும்” என்று அரியலூர் சத்யா என்ற தோழர் இணைய தளத்தில் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“ம.தி.மு.வுக்குத்தான் இந்தத் தேர்தலில் வெற்றி. ஏனென்றால் மற்ற கட்சிகளில் எல்லா கட்சியும் 3 அல்லது 4 கட்சிகள், ஜாதிச் சங்கங்கள் மற்றும் ஓட்டுக்குப் பணம் போன்றவை மூலம்தான் இந்த ஓடடுகளை வாங்கின. ஆனால் ம.தி.மு.க. மட்டுமே தேர்தலை தனியாகச் சந்தித்தது. எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் 21,000 ஓட்டுகளை வாங்கி உள்ளது. உண்மையில் 21 ஆயிரம் மனிதர்கள் ஓட்டுக்கு விலை போகாத நல்ல மனிதர்கள்” என்று அசோக் என்ற நண்பர் தேர்தல் முடிவு குறித்து இணையதளத்தில் இருந்து கூறினார். இவ்வாறு எண்ணற்றவர்கள் எங்களை ஆதரித்து இணைய பக்கங்களில் எழுதியிருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தான், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அறப்போரில் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்று கைது செய்யப்பட்ட செய்தியை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், கெடல் எங்கே தமிழர் நலம்- அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்யும் தலைவரை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
அந்த அடிப்படையில் தான் தொழிலாளர் நலன் காக்க எங்கள் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியை வளர்த்தெடுக்க உங்களிடம் வாக்குக் கேட்டு நாங்கள் வந்திருக்கிறோம். இந்தியாவிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமைக்கும், நவரத்தினா என்ற புகழுக்கும் உரிய நமது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1956 ஆம் ஆண்டில் 160 கோடி மதிப்பீட்டில் 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையமாக தொடங்கப்பட்டது. அண்மையில் கடந்த 2009-2010 நிதி ஆண்டில் 1247 கோடி ரூபாய் நிகர லாபத்தை நமது நிறுவனம் ஈட்டியிருக்கிறது.
இத்தகைய லாபம் கொழிக்கும் நிறுவனத்தை பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பதைப் போல நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்ய அன்றைக்கு இருந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்தது. அப்போது நம்முடைய கழகத்தின் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன் அவர்கள் இது குறித்த விவரங்களை நமது தலைவர் வைகோ அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனடியாக தலைவர் வைகோ அவர்கள் இச்செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
இங்கே நெய்வேலியில் இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் போர்க்குரல் எழுப்பினார்கள். மனிதச் சங்கிலிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் கோரிக்கை அட்டைகளை அணிந்து வேலைக்குச் செல்லுதல், குடிஅரசுத் தலைவருக்கு கோரிக்கை விளக்கத் தந்திகளை அனுப்புதல் என அடுத்தடுத்த அனைத்துப் போராட்டங்களிலும் எங்கள் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பங்கேற்று வீறுகொண்டு போராடியது. இதே வேளையில், டில்லிப் பட்டணத்தில், நாடாளுமன்றத்தில், போராட்டத்தின் நியாயத்தை விளக்கி 19.03.2002 அன்று தலைவர் வைகோ முழக்க மிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர், பிரதமர் சந்திரசேகர், மார்க்சிÞடு கம்யூனிÞட் கட்சியின் சுரேஷ் குப்தா , அ.திமு.க.வின் தலித் எழில்மலை, தி.மு.க.வின் ஆதிசங்கர் ஆகிய உறுப்பினர்கள் எல்லாம் தலைவர் வைகோ அவர்களின் பேச்சை ஆதரித்துப் பின்னர் உரையாற்றினார்கள். நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டதோடு, அப்போதைய நிலக்கரித்துறை அமைச்சர் ராம்விலாÞ பாÞவானை, பிரதமர் வாஜ்பாய் அவர்களை சந்தித்து தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை தடுத்து நிறுத்திய ஒரே தலைவர் நமது வைகோ அவர்கள். இதற்கடுத்து காங்கிரசு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் நெய்வேலி நிறுவனத்தின் பத்து விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டபோதும், தலைவர் வைகோ வன்மையாகக் கண்டித்தார்.
சேலத்தில் தங்க நாற்கர சாலை திட்டத்தொடக்க விழாவில் பங்கேற்க வந்திருந்த தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்த வைகோ அவர்கள், இதனைக் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தினார். இதன் விளைவாக நமக்கு சூழ இருந்த மாபெரும் இடர்பாட்டை அப்போது தகர்த்து தரைமட்டமாக்கினார். அரிய செயலை செய்து நமது தொழிலாளர்களை கவசமென காத்து ரட்சித்த மாபெரும் தலைவர் வைகோ; இங்கு பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய போதும், தலைவர் வைகோ அவர்கள்தான் துணையாக வந்து போராடினார். அவர்களின் போராட்டத்தை வெற்றி பெறச்செய்தார்.
இதனைப் போலவே மே தின விழாவுக்கு விடுமுறையைப் பெற்றுத் தருவதிலும் நமது தலைவர் சாதனை படைத்தார். எங்கள் அவைத்தலைவர் - அறிஞர் அண்ணா காலத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்குரிய திருப்பூர் சு. துரைசாமி அவர்களின் வற்புறுத்தல் காரணமாகத்தான் மே தின விழாவை விடுமுறைநாளாக அண்ணாவின் அரசு அறிவித்தது. இதன் அடுத்தகட்ட தொடர் நடவடிக்கையாக - மேதின விழாவிற்கு தேசிய விடுமுறை வழங்கிட, அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் வற்புறுத்தி ஆணைப்பிறப்பிக்க வைத்த பெருமை நமது தலைவர் வைகோ அவர்களுக்கு மட்டும் தான் உண்டு. மேதின விழாவின் நூற்றாண்டு நடைபெற்ற வேளையில், நாடு முழுக்க சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க, நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ வேண்டுகோள் வைத்தார். பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து முறையிட்டார். இதன் விளைவாகத்தான் அன்றைய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சத்யபால் மாலிக் அவர்கள் மேதினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தார். இத்தகைய சாதனைகளை எல்லாம் நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்புகள் எந்நாளும் பறை சாற்றிக்கொண்டிருக்கும்.
நண்பர்களே, நாம் குழுமியிருக்கிற இடத்தின் அருகிளே பச்சைத் தமிழர் காமராசர் சிலை கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இங்கே அமைந்திட தலைவர் காமராசர் தான் முழுமுதல் காரணம் என்பதை நன்றியுணர்ச்சியோடு இன்றைக்கும் குறிப்பிட வேண்டும். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலம் என்ற நிலையில் தொழில்துறையில் முன்னேற்றம் காணவைத்த மாமனிதர்தான் நம் காமராசர். அவரது சாதனைகளை நாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கலாம். காரியம் காமராசர் - காரணம் பெரியார் என்று ஆனந்த விகடன் ஏடு அப்போது சுட்டிக்காட்டியதே, அதனைப்போல தமிழகத்தை கல்வியில், வேளாண்மையில், பொருளாதார மேம்பாட்டில் முன்னேற்றம் காணச்செய்த தியாகத் தலைவர் தான் காமராசர். அவருக்கு மணிமண்டபம் எழுப்பி அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் விரும்பினார்கள். கடல்மட்டத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டடம் கட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி ஆளும் அரசு, காமராசர் மணிமண்டபத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. அப்போதும் நமது தலைவர் வைகோ அவர்கள்தான் இதற்காக பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்தார். அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் முறையிட்டார். ஒரு நாள் முழுக்க மீண்டும் மீண்டும் இடைவிடாது எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக, காமராசர் மணிமண்டபம் அமைப்பதற்கான அனுமதி ஆணையை தலைவர் வைகோ பெற்றுத்தந்தார்.
இப்படி எங்கள் தலைவர் வைகோ அவர்களின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதற்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வகையில் - எங்களின் மாறா தன்னலமில்லா சேவைக்கு - தொண்டுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் எங்கள் தொழிற்சங்கத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தோழர்களே, நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் என்றைக்கும் உழைக்கும் தோழர்களின் நலன்காக்க, தமிழர் உரிமை மீட்க களத்தில் நின்று போராடிவரும் ஈடு இணையற்ற தலைவர் தான் நம்முடைய வைகோ அவர்கள்!
ஆனால், மற்றவர்கள் எப்படிப் பட்டவர்கள்? இன்றைக்கு வாக்கு கேட்டு உங்களிடம் வலம் வந்து கொண்டிருக்கிற மற்ற சங்கங்களின் செயல்பாடுகளையும் தயைகூர்ந்து சிந்தித்துப்பாருங்கள். இந்தத் தேர்தலிலும் பணத்தை வாரி இறைத்து வெற்றிபெற வேண்டும் என்று ஆலாய்த்துடிக்கிற ஆளும் அதிமுக கட்சியின் யோக்கியதை என்ன? வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம், செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறை தண்டனை என்ற அடக்குமுறை சட்டத்தை நம்மீது ஏவிவிட்டு நமது அடிப்படை உரிமைகளைக்கூட காலில்போட்டு நசுக்கியவர்கள்தான் அவர்கள்! பெரியார்-அண்ணா கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, வாரிசுகளிடம் கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சுயநல வெறியோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் கலைஞர் திமுகவின் தொழிற்சங்கத்தின் நிலை என்ன?
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தபோது நம்மோடு வீதிக்கு வந்து போராடினார்களா? நாடாளுமன்றத்தில் இதற்காக நெருக்கடி கொடுத்தார்களா? ஆளுகிற அரசின் ஆட்சியாளர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து வற்புறுத்தினார்களா? இல்லவே இல்லை! ஆனால், தொழிலாளர்களின் எழுச்சிக்குப்பின்னால், எங்கள் தலைவர் வைகோ அவர்களின் இடைவிடா தொடர் நடவடிக்கைகளுக்குப் பின்னால் கடைசியாக 24.03.2002 இல் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தனியார்மயம் கூடாது என்று மயிலிறகால் வருடிக்கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி நாடகமாடிய கட்சிதான் திமுக. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, தொழிலாளர் உரிமைகளை காவுகொடுத்தவர்கள் தொ.மு. சங்கத்தினர் என்பது உங்களுக்கெல்லாம் தெளிவாகத்தெரியும்.
இவர்களோடு கைகோர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்துள்ள காங்கிரÞ கட்சியின் யோக்கியதை என்ன? பொதுத்துறை நிறுவனத்தின் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பங்குகளை தனியாரிடம் விற்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவர்கள் தானே, இவர்கள். இவர்களுக்கு வாக்களித்தால் நாளையே நெய்வேலி நிறுவனம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது! ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் என்ன சொன்னார்? அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தால்தான் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் என்று வியாபாரியைப் போல பேசினாரே தவிர, இன்றுவரை அவர்களையும் உயர்த்திவிட வேண்டும் என்று நினைக்கவில்லையே; செயலில் ஈடுபடவில்லையே!
பணத்திமிங்கலங்களான பன்னாட்டு கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் வரிச்சலுகைகளை வழங்குகிற காங்கிரசு கூட்டணி அரசு ஏழைமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விவசாயி களுக்கும் உயிர்ப்பிச்சைப் போடக்கூட தயக்கம் காட்டுவது அக்கிரமம் அல்லவா? மானியங்களை நினைத்தால் வருவதில்லை என்று நிதிஅமைச்சர் பிரணாப்முகர்ஜி பெரிதும் கவலைப்பட்டார். அடுத்து என்ன நடந்தது? பணக்காரனுக்கு, முதலாளிகளுக்கு, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்குசலுகைகளை அள்ளி அள்ளி வழங்குகிறார்களே. அதில் கைவைக்கவில்லை! 25,000 கோடி ரூபாய் எரிபொருள் மானியங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் உரிமையை அந்த நிறுவனங்களிடமே கொடுத்தாகிவிட்டது!
இனி தாறுமாறாக விலை உயரப்போகிறது; 6000 கோடி ரூபாய் உரமானியங்களை ரத்து செய்துவிட்டார்கள். உரத்துறை மந்திரி அழகிரியிடம் எந்த முணுமுணுப்பையும் காணவில்லை. நாளை உரம் விலை உச்சத்தில் ஏறப்போகிறது. விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாய் ரியல் எÞடேட்டுகளாய் உருமாறும் நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் உரமானிய ரத்து என்பது ஏழை எளிய விவசாயிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் தானே.
நடுத்தரவர்க்கத்தினரின் தலையில் அடிப்பதைப்போல, ஒருபுறம் ஊதிய உயர்வை அறிவித்து, மறுபுறம் வருமான வரியாய்; “கொடுத்தவனே பறித்துக் கொண்டன்” என்று பாடுவதைப்போல மத்திய அரசே பிடுங்கிக்கொள்கிறது. எங்கள் தோழர்களின் உழைப்பால் கிடைத்த ஊதியத்தில் இருந்து சேமிக்கும் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டித்தொகையை குறைத்து நம் வயிற்றில் அடிக்கிறது காங்கிரÞ அரசு.
இந்த நாட்டில் உள்ள 42 விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பது தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டாரே, அதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லையே; நம்முடைய குடியரசுத்தலைவர் இந்த ஆண்டில் மட்டும் 22 நாடுகளுக்கு 12 முறை இன்பச்சுற்றுலா சென்றுவந்ததற்கு நமது வரிப்பணத்தில் இருந்து 205 கோடி ரூபாய் பாழாயிருக்கிறது. பிரதமர், மந்திரி பிரதானியின் அரசு அதிகாரிகள் பயணச் செலவுகளை இத்துடன் இணைத்தால், இவர்களின் ஊதாரித்தனமும் ஆடம்பரமும் நம்மை நிலைகுலையச் செய்துவிடும்.
இந்த லட்சணத்தில் அலைக்கற்றை ஊழலைப்போல நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதில் 10.67 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஆகும் அளவு கொள்ளை நடந்திருக்கிறது.
ஏலம் மூலம் சுரங்கங்களுக்கு உரிமை வழங்காமல், 155 நிலக்கரி சுரங்கங்களை 100 தனியார் நிறுவனங்களுக்கு குறைந்தவிலையில் ஒதுக்கீடு செய்த இந்த பகல் கொள்ளையைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் ஒரு அவைகளுமே கொந்தளித்து அமளிக்காடானதை ஏடுகளில் படித்தோம்;
தொலைக்காட்சியில் பார்த்தோம்; இதுதான் ஆளும் காங்கிரசின் உண்மையான உருவம்; திமுகழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எப்படிப்பட்டவை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த கொள்ளைப்பணம்தான் நாளை அன்பளிப்பாக உங்களிடம் வரப்போகிறது; நீங்கள் அளிக்கும் வாக்கிற்க்காக விலையாகப் போகிறது.
தோழர்களே உங்களுக்காக ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் உன்னத தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் தொழிலாளர் உரிமைப்பாசறையான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணிக்கு உங்களின் மேலான ஆதரவினை, வாக்கினை, வாழ்த்துகளை, அங்கீகாரத்தினை வழங்குங்கள் என்று அன்புடனும், உரிமையுடனும், தோழமை யுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
தொழிலாளர் உரிமை காக்கும் பாசறை
12:55 AM |
Labels:
மறுமலர்ச்சி தொழிற்சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment