‘புரட்சிப் பெண் போராளி’ ஆங்சாங் சூகியை வாழ்த்துவோம்!


2012 ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியில், மியான்மர் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில், வீராங்கனை ஆங் சாங் சூகி அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சி 45 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களில் வாகை சூடி, சாதனை புரிந்திருக்கிறது. நாடாளுமன்ற கீழ் சபைகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமு (Kawhmu) தொகுதியிலிருந்து 66 வயதான அம்மையார் சூகி வெற்றி பெற்று எதிர்வரும் 23.04.2012 அன்று நாடாளுமன்ற உறுப்பினராக, தனது கட்சியின் சார்பில் வெற்றி பெற்றவர்களுடன் பதவி ஏற்க உள்ளார்.
சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக மியான்மர் நாட்டு வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு உலகெங்கும் உள்ள ஜனநாயக ஆர்வலர்களுக்குப் புது நம்பிக்கையையும் பெரு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது! இந்த வெற்றிக்காக ஆங் சாங் சூகி அவர்கள் கடுமையான விலையைக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய பர்மாவில் 19.07.1945அன்று ஆங் சான் என்ற பர்மா விடுதலைப் போராட்ட வீரருக்கும் கின் கீ (Khin Kyi) என்ற அம்மையாருக்கும் அன்பு மகளாக அன்றைய ரங்கூன் நகரில் (இன்று யாங்கூன்) சூகி பிறந்தார். அவரது பெயரில் உள்ள ஆங் சான் (Aung San) என்ற வார்த்தைகள் அவரது தந்தையின் பெயரில் இருந்தும், சூ (Suu) என்ற வார்த்தை அவரது பாட்டியின் பெயரில் இருந்தும், கி (Kyi) என்ற வார்த்தை அவரது தாயார் கின் கீ-யின் பெயரில் இருந்தும் எடுக்கப்பட்டு ஆங் சாங் சூகி என்று பெயர் சூட்டப்பட்டார். ‘அம்மா’ என்றும், ‘அத்தை’ என்றும் பர்மிய மக்களாலும், டாக்டர் சூகி என்று அயல்நாட்டு ஊடகங்களாலும் அன்புடன் அழைக்கப்படும் சூகி அவர்களின் இலட்சியப் பயணம் இன்னல்களும், இடர்பாடுகளும், துயரங்களும், சவால்களும் நிறைந்திருந்தவை ஆகும். அவரது தந்தையார் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார்; ஆங் சான் லின் (Aung San Lin) என்ற அவருடைய சகோதரன் எட்டு வயதிலேயே செத்து மடிந்தார். மற்றொரு சகோதரரான சான்டிகோ (San Diego) என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திற்கு நாடு கடத்தப்பட்டார். பூட்டானைச் சேர்ந்த, திபெத்தில் பண்பாட்டுப் பேரறிஞரான ஏரிÞ (Aris) என்பவரை மணந்து, அலெக்சாண்டர் ஏரிÞ, கிம் என்ற ஆண்குழந்தைகளை ஈன்றெடுத்தார். புதுதில்லியில் உள்ள மேரி பள்ளி, ஏசு கான்வென்ட், லேடி ஸ்ரீராம் கல்லூரி, ஆக்Þபோர்டில் உள்ள புனித ஹக் கல்லூரி, லண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓரியண்டல், ஆப்பிரிக்கப் படிப்புக்கான கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்று இளம்கலைப் பட்டப் படிப்பையும், முனைவர் பட்ட ஆய்வையும் பெற்று மிகச் சிறந்த கல்வியாளராக உயர்ந்தார். கல்வியில் சிறந்த சூகி விரும்பியிருந்தால் நல்ல அரசுப் பணியில் ஈடுபட்டு சிறந்த குடும்பத் தலைவியாக மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தியிருக்கலாம். ஆனால், அவர் தன் தந்தையார் வழியில் மக்கள் சேவையில் ஈடுபட ஆர்வத்துடன் முன்வந்தார். இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, மக்களாட்சிக்கான போராட்டத்தினை அறவழியில் நடத்திய வீராங்கனையாக அம்மையார் சூகி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவர் பின்னால் நாட்டு மக்கள் அணிதிரண்டு வந்தார்கள். இதன் விளைவாக இராணுவ ஆட்சியாளர்களின் கடுமையான அடக்குமுறைகளுக்கு சூகி ஆளானார். 1988-ஆம் ஆண்டில் ஆங் சாங் சூகியின் அரும்பணியால் மக்கள் மனதில் ஜனநாயக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் சக்தி வீறுகொண்டு ஆவேசப் புயலாய் எழுந்து நின்றது. 8888 என்ற மக்களின் பேரெழுச்சி ஆகÞடு 8, 1988 (8.8.88) அன்று இராணுவ ஆட்சிக்கு எதிராக சூகி தலைமையில் புது வெள்ளமாய்ப் பொங்கிப் பிரவகித்து எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தது. இதன் விளைவாக தளபதி நீவின் (Newin) என்ற கொடுங்கோலனின் இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டது. 50 இலட்சத்திற்கும் அதிகமான பொது மக்கள் 26.8.1988 அன்று தலைநகர் Þவீடகன் பகோவாவில் அணிவகுத்து ஆர்ப்பரித்து நின்றார்கள். அவர்கள் மத்தியில் போராட்டத் தளபதியான ஆங் சாங் சூகி அவர்கள் மக்களாட்சியை நிறுவிட அழைப்பு விடுத்து முழக்கமிட்டார். ஆனால், ஐந்து மாத இடைவெளியில் இராணுவத் தளபதிகள் சதிவேலையில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி மீண்டும் அடக்குமுறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, தளபதி ஜன்தா (Junta) தலைமையில் தங்களின் புதிய அரசை ஏற்படுத்தினார்கள். காந்தியடிகளின் அறவழியையும், புத்த பெருமானின் அமைதி வழியையும் தத்துவ நெறியாகப் பின்பற்றி, மக்களிடையே பரப்பி ஜனநாயகம் மீட்கப் போராடி வந்த வீரப் பெண்மணியான ஆங் சாங் சூகி 27.09.1988 அன்று தனது தேசிய ஜனநாயகக் கட்சியை மக்களிடையே அறிமுகப்படுத்தினார். “அச்சத்திலிருந்து விடுபடுங்கள்; துணிச்சலோடு என் பின்னே வாருங்கள்” என்று மக்களை அறைகூவி அழைத்தார். “அச்சம்தான் ஊழலுக்கு, அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடப்பதற்கு, போர்க்குணத்தை மழுங்கடிப்பதற்குக் காரணங்களாக இருக்கிறது. எனவே, அச்சத்திற்கு விடுதலை கொடுங்கள்; நாட்டு விடுதலைக்கு என் பின்னே தொடருங்கள்” என்ற சூகியின் முழக்கம், பாமர மக்களையும் போர் வீரர்களாக மாற்றியது. வீராவேசமாய் எழுந்த மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சிய இராணுவ ஆட்சியாளர்கள், 20.07.1989 அன்று சூகியைக் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனர். சொந்த மண்ணிலிருந்து எங்காவது ஓடிப் பிழைத்துக் கொள்வதாக முன்வந்தால், விடுதலை செய்து விடுவதாக இராணுவ ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியை ஏற்க முடியாது என்று ஆங் சாங் சூகி துணிச்சலுடன் மறுத்துவிட்டார். இந்நிலையில், 1990 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தி, புதிய அரசை அமைக்க இராணுவ ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கினார்கள். தேர்தலில் போட்டியிட ஆங் சாங் சூகி அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அவரது கட்சி களத்தில் நின்றது; வென்றது. மொத்த வாக்குகளில் 59 % வாக்குகளையும் 80 % பாராளுமன்றத் தொகுதிகளையும் பெற்று அறுதிப் பெரும்பான்மையான வெற்றியினை தேசிய ஜனநாயகக் கட்சி பெற்று மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கினைப் பறைசாற்றியது. இதனை ஏற்க முடியாது என்று இராணுவ ஆட்சியாளர்கள் சண்டித்தனத்தில் ஈடுபட்டனர். சர்வ அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு இராணுவத்தினர் நடத்திய ‘கெடுபிடி’ தேர்தலில், அதிகாரம் சிறிதுமற்ற எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சி முறைகேடாக தேர்தல் நடத்தி தவறான வழியில் அதிக வாக்குகளைப் பெற்று விட்டதாக, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கட்சியிடம் அரசை ஒப்படைக்க மறுத்த இராணுவத்தினர் மீண்டும் சர்வாதிகார இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார்கள். சூகியின் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசினை வீரப் பெண்மணி சூகிக்கு வழங்கியதை உலகமே உவந்து பாராட்டியது. இவ்விருதினைப் பெற்றுக் கொள்ளக் கூட இராணுவ அடக்குமுறை ஆட்சி சூகிக்குத் தடை விதித்தது. ஆங் சாங் சூகியை 15 ஆண்டுகள் தனிமைச் சிறையில், வீட்டுக் காவலில், கடுங்காவலில் வைத்து கொடுமையாகத் தண்டித்த இராணுவ ஆட்சியாளர்கள், ஐந்து முறை மட்டுமே அவர் தனது கணவரைச் சந்திக்க அனுமதித்தார்கள். கொடிய புற்றுநோயால் தாக்கப்பட்டு சூகியின் கணவர் 53 வயதில் 27.03.1999 அன்று மரணமடைந்தார். கணவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. புற்றுநோய் தாக்கி, வாழ்வின் இறுதிக் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, இறுதியாக தன் மனைவியைக் காண ‘விசா’ கேட்டு ஆரிÞ முறையிட்டபோதும் கல்நெஞ்ச ஆட்சியாளர்கள் மறுத்து விட்டார்கள். ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அவர்களும், போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் அவர்களும், அமெரிக்க நாட்டு அரசும் “மனித நேயத்தோடு இப்பிரச்சினையை அணுகுங்கள், ஆங் சாங் சூகியை அவரது கணவர் சந்திக்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தனர். ஆனால், இராணுவ ஆட்சி மிருகத்தனமாக அக்கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்தது. கரம்பிடித்த கணவனை மட்டுமல்ல; பெற்றெடுத்த பிள்ளைகளைக் கூடப் பார்ப்பதற்கு அனுமதியில்லை என்று இராணுவ அரசு காட்டுமிராண்டித்தனமாய் நடந்து கொண்டது. 02.05.2008 அன்று நர்கீÞ என்ற புயல் தாக்கி பர்மா நாடு முழுவதும் சீரழிந்து போனது; சீர்குலைந்து போனது. சூகி காவலில் வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கூறையும் பறந்து போய்விட்டது. மின்சாரம் இல்லை. சாதாரண மெழுகுவர்த்தி மட்டும் வழங்கப்பட்டு, இருண்ட வாழ்க்கையில் ஓராண்டுக் காலம் சூகி தள்ளப்பட்டார். ஆகÞடு 2009-இல்தான் அரசாங்கத்திற்கு இவரது நினைவு வந்து, இவரது இல்லம் சரி செய்யப்படும் என்று அறிவித்து, அதன்பின்னர் சிதைந்த இல்லம் சீர் செய்யப்பட்டது. ஆனால், வீட்டுக் காவல் தொடர்ந்தது! 20.07.1989 முதல் 10.07.1995 வரை, 23.09.2000 முதல் 06.03.2002 வரை, 30.05.2003 முதல் 13.09.2010 வரை என மூன்று காலக்கட்டங்களில் சுமார் 15 ஆண்டுக்காலம் வீட்டுக் காவலில் வைத்து சூகி அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார். 03.07.2009 அன்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அவர்கள் பர்மாவுக்கு நேரில் சென்று சூகியை விடுதலை செய்யுமாறு அதிபர் தான் ஷீ (Than Shwe) அவர்களிடம் முறையிட்டார். சிறையில் தியாகச் சரித்திரமாய் வாழும் அம்மையார் சூகியைச் சந்திக்க ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் விரும்பியும் அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. ‘அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்தது எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகக் கருதுகிறேன்’ என்ற வேதனையுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பர்மாவிலிருந்து வெளியேறினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் பெருமக்களான அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர், இன்றைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, தலாய் லாமா, சிரின் பொடி, அடால்ஃப் பியர்சு Þகூவெல், கூட்ரேட் கொரிகன், ரிகோபர்ட் மென்ச், பேராசிரியர் லீ வீ செல், பெட்டி வில்லியம்Þ, ஜாடி வில்லியம்Þ ஆகியோர் ஒன்றிணைந்து ஆங் சாங் சூகி அவர்களை விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களாட்சி முறைக்கு நாட்டைக் கொண்டுவருமாறு கோரியதையும் இராணுவ அரசு பிடிவாதமாக ஏற்க மறுத்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் 14.08.2009 அன்று ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டதையும் பர்மாவின் இராணுவ அரசும் நீதிமன்றமும் ஏற்க மறுத்து விட்டன. அமெரிக்காவில் அப்போது நடைபெற்ற ஆசிய நாடுகளின் கூட்டத்திலும் (ASEAN Summit of 2009) அமெரிக்கக் குடியரசுத் தலைவர் இதனை வலியுறுத்தினார். ஆÞதிரேலியா, இÞரேல், தென் கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்Þ, வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் இதே கோரிக்கைகளை முன்வைத்தது உலகின் பார்வையைச் சுண்டி இழுத்தது. ஜப்பானின் ஹத்தோயமா அரசு 2008 ஆம் ஆண்டு 2.82 பில்லியன் யென் தொகையை அந்நிய உதவியாக வழங்கியது. ஆங் சாங் சூகியை விடுதலை செய்து மக்களாட்சி மலர நடவடிக்கை மேற்கொண்டால் மேலும் நிதி உதவி அளிப்போம் என்ற அந்நாட்டின் வாக்குறுதி, இராணுவ அதிபர்களைச் சிந்திக்க வைத்தது. இங்கிலாந்து பிரதமர் ஜோர்டன் பிரவுன் அவர்கள், பர்மாவின் இராணுவ ஆட்சியால் நிலைகுலைந்து போன பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, தனித்துச் செல்லும் போக்கினைக் கண்டித்து, மக்களாட்சி மலர்ந்திட உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்த முன்வருமாறு பர்மா இராணுவ அதிபருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வற்புறுத்தினார். 2008 டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா. மன்றத்தின் பொதுப் பேரவையில் ஆங் சாங் சூகியை விடுதலை செய்யவும், பர்மாவின் இராணுவ ஆட்சிப் போக்கைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகின் 80 நாடுகள் இதனை ஆதரித்து வாக்களித்தன. 25 நாடுகள் பொருளாதார ஆதரவு மட்டுமே தருவதாகத் தெரிவித்து பர்மாவின் தோழமையிலிருந்து விடுவித்துக் கொண்டன. பர்மாவுக்கு எதிராகக் களம் இறங்குமாறு இந்தோனேசியா சீனாவிடம் கேட்டுக் கொண்டது. இவ்வாறு உலக நாடுகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஆங் சாங் சூகிக்காகக் களம் இறங்கியபோது, அந்தப் புரட்சிப் பெண்மணி, தனிமைச் சிறையில், தனது கணவர் அனுப்பிய தத்துவம், அரசியல், வரலாறு, தலைவர்களின் சுயசரிதை ஆகிய நூல்களை ஊன்றிப் படித்து, தன் உள்ளத்தை மேலும் இலட்சிய உறுதியுடன் வைத்துக் கொண்டார். இவ்வேளையில், ஜவகர்லால் நேருவின் பன்னாட்டுப் புரிதலுக்கான விருது, அஞ்சாமைக்கான விருது, யுனெÞகோவின் அமைதி மற்றும் மறுசீரமைப்புக்கான காந்தியடிகள் பெயரிலான பன்னாட்டு விருது என 32 விருதுகளை உலகில் உள்ள நாடுகள் வழங்கி சூகியின் தியாகப் பணிக்கும் அறப் போராட்டத்திற்கும் ஆதரவு தந்து சிறப்புச் செய்தன. உலக அளவில் ஆங் சாங் சூகிக்கு ஆதரவாக எழுந்த சக்திகள் தந்த அழுத்தத்தினாலும், மியான்மரில் நீதிமன்றம் தந்த ஆணை காரணமாகவும், அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குக் காலியான 45 தொகுதிகளில் நடத்த வேண்டிய இடைத்தேர்தல் காரணமாகவும் இராணுவ அரசு சற்றே இறங்கி வந்தது. அந்நாட்டுத் தொழிலாளர் அமைச்சர் ஆங் கீ (Aung Kyi) அவர்களுடனும், அரசுத்துறைத் தலைவர்களுடனும் ஆங் சாங் சூகி நடத்திய பேச்சுவார்த்தை நல்ல பலனைத் தந்தது! இதன்விளைவாக 13.11.2010 அன்று மாலையில் ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகப் போடப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு, அணை கடந்த வெள்ளமாய், காட்டுத் தீயாய் மக்கள் திரண்டெழுந்து ஆங் சாங் சூகியின் இல்லம் முன் குவிந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அவரது செல்வப் புதல்வன் கிம் ஆரிÞ, விசா அனுமதி பெற்று ஓடி வந்து ஆருயிர்த் தாயைச் சந்தித்து பாச மழை பொழிந்தார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் விளைவாக மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை யானார்கள். தொழிற்சங்கங்களுக்கு அரசின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1.12.2011 அன்று அமெரிக்க அரசின் வெளி உறவுத் துறைச் செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் சந்தித்து தமது ஆதரவினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தார். இடைத்தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், சூகி 03.03.2012 அன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை எழுச்சியுடன் தொடங்கினார். முதுமை உடல்நலக் குறைவு, தட்பவெப்ப நிலையின் பாதிப்பு எனத் தொல்லைகள் பல குறுக்கிட்டாலும் அவற்றை மன உறுதியாலும் இலட்சிய வேட்கையாலும் எதிர்கொண்டு வாக்காளர்களிடையே ஆதரவைத் திரட்டினார். MRTV என்ற பர்மிய அரசின் தொலைக்காட்சி வாயிலாகவும். செய்தி ஏடுகள், இணையங்கள் வாயிலாகவும் சூகியின் பிரச்சாரம் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் ஊடுருவிப் பாய்ந்தது. “ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளும். மனித உரிமைகளுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளும், முறைகேடுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன; அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றன” என்று இராணுவ ஆட்சியின் கொடுமைகளைத் துணிச்சலாக மக்கள் மத்தியில் சூகி அம்பலப்படுத்தினார். “தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று பத்திரிகையாளர் ஒருவர் அப்போது கேட்டார். “நான் ஒரு செய்தியைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய அரசமைப்புச் சட்டத்தின்படி நீங்கள் அரசின் உறுப்பினரானால் தேசிய சபையில் உள்ள இடத்தை நீங்கள் காலி செய்ய வேண்டும். எனவே, என்னுடைய இருக்கையைப் பதவியை தேசிய சபையில் இழப்பதற்காகக் கடினமாக உழைக்க வேண்டுமா? அமைச்சராக வேண்டுமா?” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் என்று மயங்கித் தனது தனித் தன்மையை விட்டுக் கொடுக்கவில்லை! இந்த நிலையில் இடைத்தேர்தலில் பெரும்பான்மைத் தொகுதிகளில் சூகியின் கட்சி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைய இருக்கிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள் 13.04.2012 அன்று ஆங் சாங் சூகி அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நமது நாட்டுத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களும், மியான்மர் சென்று அங்கு மக்களாட்சி மலர்ந்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போக்கு, இலங்கைத் தீவில் இனப் படுகொலை செய்து இராணுவ ஆட்சியை மக்களாட்சி முகமூடிக்குள் நடத்திய கொலை வெறியன் இராஜ பக்சேவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆவேசம் ஆகியவை மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டட்டும்! மியான்மர் நாட்டு மக்களின் ஆதரவினை முழுமையாகப் பெற்று இடைத் தேர்தலைத் தொடர்ந்து மற்ற தேர்தலிலும் வாகை சூட மக்களாட்சியை வேரூன்றச் செய்ய, புரட்சிப் போராளியான - தியாகப் பெண் வேங்கை ஆங் சாங் சூகிக்கு பெண்ணுரிமை போற்றும் நம் இயக்கத்தின் சார்பில் வாழ்த்து மலர்களைக் குவிப்போம்! அவரது விடுதலைக்குக் குரல் கொடுத்து வற்புறுத்திய உலக நாடுகள் மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டவும், மனித உரிமைகளைப் பேணிக் காக்கும் ஜனநாயக நெறிமுறைகள் செழித்து வளரவும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்று வற்புறுத்துவோம்! பெண்ணுரிமைக்காகப் புரட்சிக் கவிஞர் பாடிய பாடல் வரிகள் மியான்மரில் நடைமுறைக்கு வருவது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறோம்! ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற அய்யா பெரியாரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வீராங்கனை ஆங் சாங் சூகி தலைமையில் விழித்தெழட்டும் மக்களாட்சி! மலர்ந்து மணம் வீசட்டும் மனித உரிமைகள்!! மண்ணோடு மண்ணாய் மடிந்து போகட்டும் மமதையாளர்களின் சர்வாதிகார ஆட்சி!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment