மரண தண்டணை ஒழிப்பு – பஞ்சாபும் தமிழகமும்!


தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்தர்சிங் ரோஜனாவைக் காப்பாற்றவும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கச் செய்யவும் பஞ்சாப் மாநில மக்கள் ஓரணியில் திரண்டு, கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். இந்திராகாந்தி அம்மையாரின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சீக்கியப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டனர். ஒரு பெரிய ஆலமரம் விழும்போது, நிலம் அதிரத்தான் செய்யும் என்று இக்கொடுமையையும் நியாயப்படுத்தியதைக் கண்டு நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிந்தது. மனிதநேயத்தின் கொடி அரைக்கம்பத்தில் கண்ணீரில் நனைந்து கனத்தோடு பறந்தது.
இதன்எதிர்வினையாக 31.8.1995 அன்று பஞ்சாப் தலைமைச் செயலகத்தின் வாயிலில் முதலமைச்சர் பியாந்த் சிங் அவர்கள் தனது காரில் ஏறி அமரும்போது, மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். இந்திராகாந்தியின் கொலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும், பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நியாயம் வேண்டும் என்று வற்புறுத்தியும் நாங்கள் தான் இந்தச் செயலில் ஈடுபட்டோம் என்று சீக்கியர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய பப்பர் கல்சா என்ற அமைப்பு பொறுப்பேற்றது. மனித வெடிகுண்டாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட திலாவர்சிங் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார். பயிற்சிகொடுத்து, திட்டமிட்டு, கொலையை மூளையாக இருந்து நடத்திய ஜக்தர்சிங்அவரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். படுகொலைக்காக திட்டமிடும் போது, ஒருவேளை திலாவர்சிங் முயற்சியில் தோற்றுப் போனால், இரண்டாவது மனித குண்டாக மாறி திட்டத்தை நிறைவேற்ற பல்வந்தர் சிங் ரோஜனா முன்வந்தார். நான்தான் வெடிமருந்து பெல்ட்டை கட்டி விட்டேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்த இவர் இதுவரை கருணை மனு கொடுக்கவும் மறுத்து விட்டார். மரண தண்டனைக்குப் பிறகு தனது விழிகளை, பொற்கோயிலில் மதகுருவாக சேவை செய்யும் பார்வையற்றவர்களுக்கு கொடையாக அளிக்கவும், தனது உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்துவிட்டு முடிவை எதிர் நோக்கி பல்வந்தர்சிங் ரோஜனா காத்திருக்கிறார். 11 ஆண்டு விசாரணைக்குப் பிறகு அரியானா நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. சண்டிகார் உயர்நீதிமன்றம் மார்ச் 31 அன்று தூக்குத் தண்டனைக்கு நாள் குறித்து 5.3.2012 அன்று ஆணையிட்டது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாட்டியாலா சிறையின் கண்காணிப்பாளர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய சிறை ஊழியர் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சிறையிலிருந்து வெளியேறிவிட்டார். சீக்கியர்களின் மத அமைப்பான அகால் தக்த், மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பாதல் அவர்களுக்கு கட்டளையிட்டது. அடுத்த 12 மணி நேரத்தில் (26.3.2012) சட்டமன்றத்தில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அவர்கள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என அனைத்து உறுப்பினர்களும் தங்கள் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தங்களின் ஒன்றுபட்ட உணர்வை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். படுகொலைக்கு ஆளான முதல்வர் பியாந்த் சிங் காங்கிரÞ கட்சியைச் சேர்ந்தவர். ஆனாலும் கூட காங்கிரÞ கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் கேப்டன் அம்ரந்தர் சிங், தூக்குத் தண்டனைக்கு எதிரானவன் நான் என்று பகிரங்கமாக நீதிமன்ற வாயிலிலேயே அறிவித்து இப்பிரச்சினையை ஆதரிக்கிறார். சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் தலைவர் அத்வார்சிங், பஞ்சாப் மாநில ஆளுநர் சிவராஜ் பாட்டீல் அவர்களை நேரில் சந்தித்து, மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தவும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கவும் வேண்டுகோள் மனுவை அளித்து முறையிட்டார். 28.03.2012 முதல் வேலை நிறுத்தம், கடை அடைப்புப் போராட்டம் என பஞ்சாப் மாநிலமே கந்தக பூமியாய் மாறி தங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கொட்டி உலகின் கவனத்தையே சுண்டி இழுத்தது. முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அவர்களும் அன்றே குடியரசுத் தலைவரைச் சந்தித்து இதற்கான மனுவை அளித்து முறையிட்டார். குடியரசுத் தலைவர் மனுவை உடனே மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க, மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் இதற்காக முறையிடாத நிலையில், மற்றவர்கள் இதற்காக முறையிடுவது ஏற்க இயலாது. கண்டனத்திற்குரியது என உச்சநீதிமன்றம் கருத்து சொன்னாலும் கூட, மனித உரிமை அமைப்புகள் - தன்னார்வ அமைப்புகள், பஞ்சாப் மாநில அரசு ஆகியோரின் வற்புறுத்தலை ஏற்று மத்திய அரசு மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளது. 28.03.2012 அன்றே முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அவர்களை நமது தலைவர் வைகோ அவர்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பெரும் பதட்டத்தில் இருந்து பஞ்சாப் விடுபட்டுள்ளது என்று நமது தலைவர் வைகோ அவர்களிடம் முதல்வர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். மரண தண்டனைக்கு எதிரான, நம்மைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கும், மனித நேயப் பற்றாளர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்திதான். 2007 ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றம் உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனை விதிக்கும் தங்கள் நாட்டு சட்டங்களை நீக்கிவிடவேண்டும் என்று வற்புறுத்திய சூழலில், உலகில் 135 நாடுகள் மரண தண்டனையை தங்கள் நாடுகளில் ஒழித்துவிட்டன. இந்தியா இதனைப் பின்பற்றவில்லையே என்ற பெரும்குறை நம்மைப் போன்ற மனித நேயம் கொண்டோருக்கு உண்டு. இருப்பினும் 1981 ஆம் ஆண்டு முதல் 90 சதவிகித மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு ஆறுதலான செய்தி! மரண தண்டனைக் கைதிகளில் 23 பேருடைய கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்நாள் தண்டனையாகக் குறைத்துள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 17 பேரைக் கொலை செய்த பியாராசிங், அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம்சிங், குருதேவ் சிங் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டுவிட்டது. உத்திரபிரதேசத்தில் மூன்று பேரைக் கொன்று அவர்களின் தலையை வெட்டி எடுத்து ஊர்வலமாக வீதியில் சென்றவன் - 10 வயது சிறுவனைச் சுட்டுக் கொன்று அவனது உடலை தீயில் இட்டு கொடும் செயலில் ஈடுபட்டவன் என்ற குற்றங்களுக்கு ஆளான செரோம், ஷியாம் மனோகர் ஆகியோரின் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில், மூடநம்பிக்கையால் மூளையை இழந்து தனது ஒன்பது வயது சிறுவனை மந்திரவாதியின் முன்னே நரபலியிட்டுக் கொன்ற சுசில் மர்மு என்பவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை, வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது. நம் தமிழகத்தில் ஈரோடு அருகில், தனது குடும்பச் சொத்தை அபகரித்து ஏமாற்றிய மாமனை பழிவாங்கும் வெறியில் மாமாவையும் அவரின் 3 சிறிய குழந்தைகளையும் கொன்ற கோவிந்தசாமிக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது. திருத்துவது (Reformation), வஞ்சம் தீர்ப்பது (Retribution) தயக்கப்படுத்துவது (Deterrece) என தண்டனைகளில் மூன்று கோட்பாடுகள் உண்டு. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் வகையில் நீதி வழங்குவது என்பது மருந்தே நஞ்சாகி விடுவதைப் போன்றது. எனவே, குற்றவாளிகளை வஞ்சம் தீர்க்கும் வகையில் கடுமையான தண்டனை தந்து அவனது உயிரைப் பறிப்பது கொடுமையானது என்ற மனிதநேய சித்தனை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் வேளை இது! “உலகிலேயே படுமோசமான கயவனையும் கூட திருத்த முடியும். பொருத்தமான பயிற்சியின் வாயிலாக, பொருத்தமான சீர்படுத்தலின் வாயிலாக, மனப்பாங்கை மாற்றும் படியான பொருத்தமான வழிமுறைகளின் வாயிலாக, பொருத்தமான சகவாசத்தின் வாயிலாக, பொருத்தமான விழுமங்களைப் புகட்டுவதன் வாயிலாக மனிதனை மாற்ற முடியும். இது மிருகத்தை மனிதனாக்குகிற முயற்சி. இதுதான் இப்போது தேவைப்படுகிறது” என்று ராஜேந்திர சிங் வழக்கில் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துகளை நீதி அரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் தமது தீர்ப்பில் ஆணையாகக் குறிப்பிட்டிருந்தார். இவை எல்லாம் நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனாலும்கூட, மரண தண்டனையில் சிக்கியுள்ள 91 குற்றவாளிகளின் கருணை மனுக்களில் 23 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, 18 பேருடைய மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டு விட்டன. பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஐந்து பேருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இவர்கள் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சதோடு சிறைக்கம்பிகளுக்கு இடையில் நாள்தோறும் மரணபயம் கவ்விப் பிடித்துள்ள நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்குவதில் உள்ள விருப்பு வெறுப்பு - அரசின் நெருக்குதல் இவைகளினால் அல்லலுறும் இவர்களின் அவல வாழ்விற்கு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கம் நம் நெஞ்சை துளைத்தெடுக்கிறது. “கருணை என்பதற்கு வேண்டியவர் - வேண்டாதவர் எல்லோரும் ஒன்றுதான். கருணையில் பாகுபாடு பார்க்கும் நிலை ஏற்பட்டால் அது கருணை அல்ல; சந்தர்ப்பவாதம் தான்.” கருணை மனு கொடுத்த சில மணி நேரங்களிலேயே தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது இந்த முடிவு பல்வந்தர்சிங் மீது ஏற்பட்ட பரிவினால் அல்ல, முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இந்த அரசியல்தான் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒருவகையான மனக்கசப்பை மேலும் கூட்டுகின்றது. ஒரு கொலைக்குற்றவாளியின் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைப்பதில், நீதிமன்றத்தினைக் காட்டிலும் கூடுதலாக ஒரு சலுகை. இதை அதிகாரம் என்று சொல்ல முடியும். இது அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. இதனை அனைவருக்கும் ஒன்றாகப் பயன்படுத்தாமல், வேண்டிய கைதிகளுக்கு ஒரு கருணையும், வேண்டாத அரசியல் கட்சிகளைச் சார்ந்த கைதிகளுக்கு கருணை மறுப்பும் முறையா? கருணையிலும் பாகுபாடு என்பது ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போன்றது. ஒன்று மரண தண்டனையை சட்டத்திலிருந்து எடுத்து விடுங்கள் அல்லது கருணை அரசியலை தூக்கிலிடுங்கள். பாரபட்சமான கருணை பல்வேறு பாரபட்ச நிலைக்கு வழி வகுக்கும்”. மேலே நாம் எடுத்துக்காட்டிய கருத்துகள் தினமணி (02.4.2012) ஏட்டில் ‘கருணையல்ல சந்தர்ப்பவாதம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் உள்ளவையாகும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் படுகிற பாட்டை எண்ணிப் பார்த்தால், இதயம் கனக்கிறது. நாள்தோறும் சிறுகச் சிறுக என்னைக் கொல்வதைவிட, ஒரே நாளில் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று சிறைக்கொட்டடியில் இருந்து பேரறிவாளன் எழுப்பிய குரல், நம் இதயத்தில் வாளாய்ப் புகுந்து பிளக்கிறது. 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தவர்களை, அரசமைப்புச் சட்ட விதி 161இன் படி, நடுவண் அரசின் ஆலோசனையைப் பெறாமலேயே மாநில அரசு விடுதலை செய்யலாம். ஆனால், நளினி, ராபர்ட் பயாÞ, ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் இருபது ஆண்டுகள் தனிமைச் சிறையில் கடுமையான தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். மருத்துவர்கள், சிறை அதிகாரிகள் விடுதலை செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள். கருணை மனு, கண்ணீர்க் கடிதம், கையெழுத்து இயக்கம் என தொடர்ந்து முறையீடுகள்.. ஆனாலும், கிணற்றில் போட்ட கல் போல நீதி புதைகுழியில்தான் கிடக்கிறது. என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் எனறு ராபர்ட் பயாÞ கோரிக்கை வைக்குமளவிற்கு, இருட்டறையில் கிடக்கும் இந்த எளியவர்களுக்கு நீதியின் வெளிச்சம் இன்னமும் மறுக்கப்பட்டே வருகிறது! நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஓய்வு ஒழிச்சல் என்று நம் தலைவர் வைகோஏறி இறங்கி நீதிக்காக குரல் கொடுத்து மூவர் உயிர் காக்க முனைப்புடன் பாடுபட்டு வருகிறார். நமது இயக்கம் பல்வேறு சங்கடங்களுக்கும், நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் இடையில் மரண தண்டனையை மாண்டொழியச்செய்ய தொடர்ந்து களத்தில் நின்று காரியமாற்றி வருகிறது. கட்சி எல்லைகளைக் கடந்து இன விடுதலைக்கு வீதியில் நின்று போராடி வரலாற்றில் நிலைத்து நிற்கும் சீக்கியர்களின் போர்க்குணமும், தியாகமும் தமிழர்களுக்கு வரும் நாள் எப்போது? என்ற எண்ணம் நம் இதயத்தின் எல்லா அறைகளிலும் ஏக்கமாய்த் தேங்கி- நிரம்பி வழிகிறது!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment